பள்ளியில்இருந்து மாயமான சிறுமிகள்; ஊரையே பதற வைத்த சிசிடிவி- கடலூரை அதிர வைத்த சம்பவத்தில் ட்விஸ்ட்

Update: 2024-09-11 11:30 GMT

கடலூரில் 9ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் மாயமான சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

கடலூர் புதுநகர் காவல்நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் திடீரென மாயமாகினர்..

பள்ளி முடிந்து நேரமாகியும் மாணவிகள் வீட்டுக்கு வரவில்லை என பதறிப்போன மாணவிகளின் பெற்றோரும் பள்ளிக்கு வந்து விசாரித்ததில், அவர்கள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி விட்டதாக தெரிவித்தனர்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், புதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையிலான போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் பள்ளியின் நுழைவு வாயில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், பள்ளிக்கூடம் முடிந்ததும் 4 மாணவிகளும் ஒன்றாக கைகோர்த்தபடி வெளியேறுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.


அத்துடன் அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆராய்ந்தனர்.

தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், அதே பள்ளியில் படித்த மற்றொரு மாணவியின் வீட்டிற்கு இந்த 4 மாணவிகளும் சென்றது தெரியவந்துள்ளது.

சிதம்பரத்தில் இருந்த மாணவிகளை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்த நிலையில், வீட்டில் தொடர்ந்து படிக்க சொல்லி கூறியதால், வீட்டை விட்டு வெளியேறியதாக திடுக்கிடும் பதில் அளித்துள்ளனர் அந்த மாணவிகள்..

பெத்த பிள்ளையை படிக்க சொன்னது ஒரு குத்தமா என பலர் கேள்வி எழுப்பும் நிலையில் இதுபோல் எமோஷனலாக முடிவெடுக்கும் பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது அவசியம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்