அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி செலுத்த உதவக்கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் கம்பளிமேட்டை சேர்ந்த சிவராஜ் - சிவசங்கரி தம்பதியின் ஒரு வயது ஆண் குழந்தைக்கு, முதுகுதண்டுவட வளைவு பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை, புதுச்சேரி, பெங்களூருவில் உள்ள மருத்துவமனைகளில் குழந்தையை பெற்றோர் காட்டியுள்ளனர். இந்நோய்க்கான மருந்து இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை என்றும், 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மருந்து ஊசிக்கான நிதியுதவி மற்றும் வரிவிலக்கு சான்று கோரி, தம்பதிகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணங்காட்டி அதிகாரிகள் அறிவுறுத்தியதின் பேரில், மனுவை பெட்டியில் போட்டனர். குழந்தையின் உயிரை காப்பாற்ற தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என பெற்றோர் கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்தனர்.