2023 சென்னை வெள்ளம் - வந்து விழுந்த பல கேள்விகள் ஆங்கில நாளிதழ் பேட்டியில் மனம் திறந்த முதல்வர்

Update: 2023-12-16 06:45 GMT

புயலால் ஏற்பட்ட சேதத்தைப் பார்வையிட வந்த மத்திய நிபுணர்கள் தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகத்தான் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் நிவாரணப் பணிகள் குறித்து அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. அவை ஒருபுறம் இருக்க நிவாரணப் பணிகள் உங்களுக்குத் திருப்தியை அளிக்கின்றனவா? இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா

தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய அரசின் குழு முழுமையாக வரவேற்றுப் பாராட்டி இருக்கிறது. 'சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, இல்லையென்றால் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும்' என்றும், 'உரிய நேரத்தில் நீர் திறந்து விடப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது' என்றும், 'அதற்காக இந்த அரசை நாங்கள் பாராட்டுகிறோம்' என்றும் ஒன்றியக் குழு பாராட்டி இருக்கிறது.

இதே கருத்தை, மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களும் என்னைச் சந்தித்தபோது தெரிவித்தார்கள்.

அரசியல் ரீதியாக ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் எங்களுக்குமான கொள்கை முரண்பாடுகள் அனைவரும் அறிந்ததே. அதனையும் தாண்டி இந்தளவுக்குப் பாராட்டுகிறார்கள் என்றால், தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகள்தான் இதற்குக் காரணம்.

கடுமையான மழை இரண்டு நாட்கள் இடைவிடாது பெய்கிறது. மழை நின்றதும் நிவாரணப் பணிகளை நாங்கள் தொடங்கிவிட்டோம். மறுநாளே போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. பெரும்பாலான பகுதிகளுக்கு மின் இணைப்பானது மூன்று நாட்களுக்குள் கிடைத்துவிட்டது. புறநகரில் ஒரு சில பகுதிகள் நீங்கலாக நான்கைந்து நாட்களுக்குள் மற்ற அனைத்துப் பகுதிகளும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டன.

தண்ணீரில் மூழ்கியிருந்த பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்தோம். அவர்களையும் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வந்து அமர்த்தினோம். நானே பல்வேறு பகுதிக்குச் சென்றேன். 20 அமைச்சர்கள், 50 ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் அதிகாரிகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் களத்தில் இருந்தார்கள். வெளிமாவட்டங்கள் அனைத்திலிருந்தும் ஆதரவுக் கரம் நீண்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த நொடி வரையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

புயலுக்கு முன்பும் - புயலின் பிறகும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான் பாதிப்பு குறைந்தது. பொதுவாக மக்கள் பணியாற்றும் நாங்கள் மேலும் மேலும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்றுதான் நினைப்போம். இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். இன்னும் அதிகமாக மக்களுக்கு உதவவே நான் ஆசைப்படுகிறேன்.

2015-இல் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கதில் இருந்து நீர் திறந்து விடுவதில் ஏற்பட்ட குளறுபடியே பெரும் பிரச்சினையை உருவாக்கியது. ஆனால் ஆட்சியில் அமர்ந்த நாளில் இருந்தே கட்டமைப்புகளை வலுப்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உங்கள் அரசு எடுத்திருந்தும் இத்தகைய இழப்பு ஏற்படக் காரணம் என்ன? இந்த அனுபவத்தில் இருந்து அரசுக்குக் கிடைத்திருக்கும் பாடம் என்ன?

செம்பரம்பாக்கத்தில் 2015-ஆம் ஆண்டு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத காரணத்தால் - அதிமுக ஆட்சியில் சென்னையே மிதந்தது. ஏரியைத் திறந்து விடுவதற்கான அனுமதியை அம்மையார் ஜெயலலிதாவிடம் வாங்குவதற்கு நாள்கணக்கில் காத்திருந்தார்கள் அதிகாரிகள். ஆனால் இப்போது அப்படி அல்ல. உரிய நேரத்தில் தண்ணீரைப் படிப்படியாகத் திறந்து விட்டு, தயார் நிலையில் இருந்தோம். ஆனாலும் வெள்ளம் அதிகமாக வரக் காரணம், மழையின் அளவு அதிகமாக இருந்ததுதான்.

இதுகுறித்து Former MIDS Director டாக்டர் S.ஜனகராஜன் அவர்களுடைய ஊடகப் பேட்டி ஒன்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அந்தப் பேட்டியில், "2015 பேரிடர் Man Made Disaster. அது மழை வெள்ளத்தால் ஏற்பட்டது அல்ல. ஆனால் 2023 பேரிடர் கொடூரப் புயல் காரணமாக 36 மணி நேரத்தில் 530 மி.மீட்டர் மழைபெய்த காரணத்தால் ஏற்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலானது சென்னையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் 16 மணி நேரம் நிலை கொண்டிருந்தது. மணிக்கு 8 முதல் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. இதுவே, சென்னையில் பரவலாக இடைவிடாது கனமழை பெய்யக் காரணமாயிற்று. 47 ஆண்டுகளில் பெய்யாத மழை, 177 ஆண்டுகளில் மூன்றாவது பெரிய மழை. எனவேதான் தண்ணீர் அதிகம் தேங்கியது. கடல் மட்டம் உயர்ந்து இருந்ததால், போய்ச் சேரும் தண்ணீரை உள்வாங்கவில்லை. இதுவும் இப்போதைய சூழ்நிலைக்குக் காரணம் ஆகும்.

ஒன்றிய அரசிடம் நிதிக் கோரிக்கை வைக்கும் எனது கடிதத்தைப் பிரதமர் அவர்களிடம் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கொடுத்தபோது, இதே கருத்தைத்தான் பிரதமர் மோடி அவர்களும் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாகக் காலநிலை மாற்ற இயக்கத்தைத் துவக்கி இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். அதற்கான சிறப்புக் குழுவையும் அரசு அமைத்துள்ளது. துறையின் பெயரை "சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை" என்று அறிவித்தோம். தமிழ்நாட்டிற்கான காலநிலைத் திட்டத்தை அறிவித்தோம். அவர்களது மாநாட்டில் நானே கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறேன். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இந்தளவுக்கு கவனம் செலுத்தவில்லை.

எனவே மக்கள் தொகையின் அடர்த்தி - மழையின் அளவு - புயல் சீற்றங்கள் - வடிகால் கொள்ளளவு - வெள்ளச் சமவெளிகள் - கடல் மட்டம் - புவி வெப்பமயமாதல் - ஆகிய அனைத்தையும் மனதில் வைத்து திட்டங்களை உருவாக்க வேண்டும். காலநிலை மாற்றம்தான் நாம் எதிர்கொள்ளப் போகும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கப் போகிறது என்பதை நான் பல நிகழ்வுகளில் சொல்லி இருக்கிறேன். இதையும் மனதில் வைத்து திட்டங்களை உருவாக்க வேண்டும்.

புறநகர்ப் பகுதிகளில் திட்டமிடப்படாத கட்டுமானப் பணிகள் பெருகி விட்டன. நீர் வடிவதற்கு எந்த விதமான வசதியை உருவாக்காமலும் மற்ற அடிப்படை வசதிகளை உருவாக்காமலும்

அவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டதே வெள்ளம் வீடுகளில் புகுந்தது. இக்குற்றச்சாற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்?

2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டு காலத்தில் எந்தப் பணியையும் திட்டமிட்டுச் செய்யவில்லை அ.தி.மு.க. அரசு. அதன் விளைவுகளைத்தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். 2021-ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஆலோசனைக் குழுவை அமைத்தோம். அவர்களது ஆலோசனைப்படி திட்டங்களைத் தீட்டி வருகிறோம்.

அடையாறு மற்றும் கூவம் வடிநிலப்பகுதிகளில் உலக வங்கி நிதியில் 44.88 கி.மீ நீளத்திற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டிலும், சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியில் 50 கி.மீ நீளத்திற்கு ரூ.255 கோடி மதிப்பீட்டிலும், மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியின்கீழ் 59.5 கி.மீ. நீளத்திற்கு ரூ.232 கோடி மதிப்பீட்டிலும், மூலதன நிதியில் 11 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளால் சென்ற 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது பெரும் பாதிப்பை சந்தித்த தியாகராய நகர், அசோக் நகர், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், புளியந்தோப்பு போன்ற பல பகுதிகளில் தற்போது பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையின் வட பகுதியில் உள்ள கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் 769 கி.மீ நீளத்திற்கு, ரூ.3,220 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 68 விழுக்காட்டுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதனால் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூரில் வாழும் மக்கள் பயனடைவார்கள்.

 கோவளம் வடிநிலப்பகுதியில் 360 கி.மீ. நீளத்திற்கு. ரூ.1714 கோடி மதிப்பீட்டில் KfW வங்கி நிதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், நங்கநல்லூர், கண்ணன் காலனி, மயிலை பாலாஜி நகர், புவனேஸ்வரி நகர், புழுதிவாக்கம், கண்ணகி நகர், எம்சிஎன் நகர் மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். மீதமுள்ள பணிகள் நிறைவேற்றப்படும் போது, இந்திரா நகர், நீலாங்கரை, வெட்டுவான்கேணி, செம்மஞ்சேரி உள்ளிட்ட சென்னையின் தென்பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவேறும் போது, சென்னையில் வெள்ளத்தின் தாக்கம் பெருமளவு குறைக்கப்படும் என்று நான் கருதுகிறேன்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. நீர் வடிந்து தேங்காமல் இருப்பதற்கு இயற்கையால் உருவான அந்த நிலத்தை முழுவதுமாக மீட்டு அரசு நடவடிக்கை எடுக்குமா? அது போல வேளச்சேரியிலும் பல இடங்கள் சதுப்பு நிலமாகவே இருக்கின்றன. அவற்றைப் பாதுகாக்க அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கப் போகிறது?

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுமையாகப் பாதுகாப்பது மிகமிக அவசியமானதாகும். தென்சென்னை பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் பயன்பாடு குறித்து நிச்சயமாக மறு ஆய்வு செய்யப்படும். இந்த சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும், வனத்துறை ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் (Third Master Plan) தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த முழுமைத் திட்டத்தில் வெள்ளத் தடுப்பிற்கான திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு, ஓராண்டு காலத்திற்குள் அது வெளியிடப்படும். இந்த மூன்றாவது முழுமைத் திட்டத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் சென்னையில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்புகளைக் குறைப்பதற்கான அம்சங்கள் இடம்பெறும். சென்னையையும், அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளையும், சதுப்பு நிலங்களையும் மேம்படுத்தி, வெள்ள பாதிப்புகளைக் குறைத்து, ஒரு நிலைக்கத்தக்க திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வதற்கு இந்த மூன்றாவது முழுமைத் திட்டம் (Third Master Plan) நிச்சயம் வழிவகுக்கும்.

சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளும் தண்ணீர் வடியும் பாதைகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருக்கின்றன. கனமழை பெய்யும்போது எல்லா ஊர்களிலுமே இது போன்ற நிலைமை ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளைச் சுணக்கம் காட்டாமல் அகற்ற அரசு முன் வருமா?

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு எப்போதும் முனைப்புடன் உள்ளது. எவ்வித ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு ஆகும். நீர்நிலைகளையும், வெள்ளச் சமவெளிகளையும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளில் இருந்து காக்க வேண்டும். அத்தகைய நீர்நிலைகளைச் சுத்தம் செய்து அகலப்படுத்த வேண்டும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நவம்பர் 2021 முதல் நவம்பர் 2023 வரை நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 350 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, 475.85 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோன்று, நீர்வள ஆதாரத் துறைக்குச் சொந்தமான ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட பகுதிகளில் 19,876 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, 220.45 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

நீர்ப்பிடிப்பு மிக்க நெல்வயல்கள் குடியிருப்புகளாக மாறுவது ஒரு முக்கியமான பிரச்சினையாக மாறுகிறது. அவற்றை தடுக்கவோ, வரைமுறைப்படுத்தவோ அரசு ஏதாவது செய்ய முடியுமா?

நான் ஏற்கெனவே கூறியது போல் மூன்றாவது முழுமைத் திட்டத்தை (Third Master Plan) வடிவமைக்கும்போது, இது தொடர்பான அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு முறையும் புயல் வரும்போதும் அரசு தீவிரமாக செயல்படுகிறது. அதற்குப் பின்னால் ஒரு சுணக்கம் ஏற்பட்டு விடுகிறது. ஆண்டு முழுவதும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுச் செயல்பட முடியாதா?

அரசின் பணிகளில் சுணக்கம் இல்லை. கழக ஆட்சி ஆறாவது முறையாக வந்தபிறகு நாங்கள் செய்துள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்ப் பணிகளைப் பாருங்கள். அதனால்தான் பெரிய அளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டது. மீதமுள்ள பணிகளையும் விரைவில் முடித்துவிடுவோம்.

அடுத்தகட்டமாக பல புதிய பணிகளைத் தொடங்க இருக்கிறோம். எனவே, இது முடிவுற்று விடும் பணியல்ல, தொடர்ச்சியான பணி என்பதை நாங்கள் தொடர்ந்து அறிந்துள்ளோம். மக்கள் தொகை பெருகப் பெருக, நகரம் விரிவடைய விரிவடைய எங்களது திட்டமிடுதல்களும் விரிவடையும் என உறுதி அளிக்கிறேன்.

முதல்வராகிய நீங்களும் ஆளுநரும் கலந்து பேசி, நிர்வாகத்தில் இருக்கும் முட்டுக்கட்டைகளைப் போக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆளுநர் உங்களை அழைத்திருக்கிறார். அரசு நிர்வாகத்தில் இருக்கும் சிக்கல்களை இது களையும் என்று நம்புகிறீர்களா?

மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபிறகு பல முறை அவரை நான் சந்தித்து இருக்கிறேன். பேசி இருக்கிறேன். அரசு விழாக்களிலும் பல முறை இருவரும் பங்கெடுத்து இருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் இனிமையாகத்தான் பழகினார் - பேசினார். எனவே, நாங்கள் இருவரும் சந்திப்பது அல்ல பிரச்சினை. ஆளுநர் மனம் மாறித் தமிழ்நாட்டின் நன்மைக்காகச் செயல்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டு மக்களுக்கும், சிந்தனைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான சில சக்திகளின் கைப்பாவையாக அவர் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதாக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இச்சூழலில் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நம்புகிறீர்கள்?

மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பவை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்தான். இது நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பாதிக்காது. பொதுவாகச் சட்டமன்றத் தேர்தலின் போது மாநிலப் பிரச்சினைகள்தான் தலைதூக்கிக் காணப்படும். அவைதான் இத்தகைய முடிவுக்குக் காரணம் ஆகும்.

இராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம் பேர்தான். சத்தீஸ்கரில் 6 லட்சம் வாக்குகள்தான் பா.ஜ.க அதிகம் பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும்தான் 35 லட்சம் வாக்குகளைக் கூடுதலாக பா.ஜ.க பெற்றுள்ளது.

பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல், ஒருமுகப்பட்டிருக்குமானால் இந்த மூன்று மாநில வெற்றியை பா.ஜ.க பெற்றிருக்க முடியாது என்பதே உண்மை. நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை 'இந்தியா' கூட்டணி செய்யும். அதன் மூலமாக நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை நாங்கள் பெறுவோம். மூன்று மாநிலத் தேர்தல் முடிவைப் படிப்பினையாகவே நாங்கள் பார்க்கிறோம்.

திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கை வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கின்றனவே?

முதலில் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், அறிக்கை விடும் எதிர்க்கட்சிகள் பேரிடர் களத்திலும் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளிலும் ஈடுபடவில்லை.

திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல திட்டங்களைச் ஏற்கெனவே செயல்படுத்தி வருகிறது. இன்னும் செயல்படுத்தவுள்ளது. திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அத்திட்டங்களின் தற்போதைய நிலை ஆகியவற்றைத் தொகுத்து விரைவில் எங்கள் அரசு பொதுவெளியில் வெளியிடும். என்னைப் பொறுத்தவரை, இந்த அரசு ஒரு நேர்மையான, வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற வகையில் செயல்படும் அரசு. இந்த இரண்டரை ஆண்டுகளில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்ட வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், அதற்கான செலவினம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், நாங்கள் வெகுவிரைவில் பொதுமக்களின் தகவலுக்காக வெளியிடுவோம்.

Tags:    

மேலும் செய்திகள்