சென்னையில் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தியிருந்தால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, போக்குவரத்து காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த கிஷோர் என்பவர், அவரது குடியிருப்பின் அருகே எந்த உரிமமும் இல்லாமல் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரரின் புகாரை விசாரித்து வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும், அந்த பகுதியில் நோ - பார்க்கிங் பலகை வைக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குடியிருப்புகளின் அருகில் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தப்பட்டால், என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சென்னை போக்குவரத்து போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.