பதற்றத்தில் இருந்த மக்களுக்கு ஆறுதல்... சென்னையில் அடுத்த 6 மாதங்களுக்கு...வெளியான அதிமுக்கிய தகவல்

Update: 2024-07-06 16:03 GMT

சென்னையில் போதுமான அளவு தண்ணீர் கையிருப்பு உள்ளதால் 6 மாதத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்ற செய்தி சென்னைவாசிகளை சற்று நிம்மதியடைய வைத்திருக்கிறது...

சென்னை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள பகுதிகளுக்கு 6 ஏரிகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் 3 நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு 1072 MLD குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. இதில் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்..

இவர்களுக்கு விநியோகிக்க சராசரியாக மாதம் ஒரு டிஎம்சி குடிநீர் தேவைப்படுகிறது..

அதன்படி கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை நாளொன்றுக்கு 85 கோடி லிட்டர் அதிகபட்சமாக விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் அதே ஆண்டில் கூடுதலாக 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிய குடிநீர் இணைப்புகளை பெற்றனர்.

இதன்படி 2021 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 100 முதல் 107.2 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது..

கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீரானது சுத்திகரிக்கப்பட்டு 111 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இருக்கும் 6 டி.எம்.சி. நீர் மூலம் வரும் நவம்பர் மாதம் வரை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் 30 ஆயிரத்து 125 நடைகள் இணையதளம் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்க தொட்டியில் 16 ரப்பர் மதகுகள் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது...

அத்துடன் பழுதடைந்த 2 மதகுகள் புதிதாக மறுவடிவமைப்பு செய்து கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது.

இந்த பணிகள் மே மாதத்தில் தொடங்கிய நிலையில் இந்த மாதம் இறுதி அல்லது ஆகஸ்ட் மத்தியில் ஆந்திராவில் உள்ள கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் வரும் போது முடிவடையும் என நீர்வளத்துறை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி மொத்தம் உள்ள 140 அடியில் 121.80 அடி நீர் கைவசம் உள்ளது. மேலும் 2 புதிய மதகுகளை சரிசெய்து விட்டால் நீர் கசிவு என்பதே இருக்காது என்றும், இந்த பணிகள் எல்லாம் முடிந்துவிட்டால் ஏரியின் நீர் முழுமையாக மக்களின் தேவைக்கு பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வடகிழக்கு பருவ மழை நீரை சேமித்து வைப்பதற்கும் ஏரி முழுமையாக தயாராகி விடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் பாலாஜியுடன் செய்தியாளர் ராமச்சந்திரன்..

Tags:    

மேலும் செய்திகள்