சென்னையை விழிபிதுங்க வைத்த ரீல்ஸ்... Influencerகளால் வந்த வினை... மக்களை கொதிக்க வைத்த சம்பவம்

Update: 2024-10-06 07:57 GMT

இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்களின் ப்ரமோஷன் வீடியோவை நம்பி, குறைந்த விலையில் பிராண்டட் ஷூ வாங்க மக்கள் கூட்டம் குவிந்த நிலையில், முறையாக அனுமதி பெறாததால் விற்பனையையே போலீசார் நிறுத்தியது, நம்பி வந்தவர்களை கோபமடையச் செய்தது.. என்ன நடந்தது ? பார்க்கலாம் விரிவாக..

வடபழனி முதல் கோயம்பேடு வரை இப்படியான ஒரு போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் கூட்டத்திற்கு காரணம் கட்சி கூட்டமோ, சினிமா பிரபலங்களின் வருகையோ என்று நினைத்தால் அது தான் தவறானது.

குறைந்த விலையில் ஷூ கிடைக்கும் என ஒரு இன்ஸ்டா ரீல்ஸை நம்பி குவிந்த கூட்டம் தான் இது...

மாஸ் டீல்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பாக அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் மூன்று நாட்கள் ஷூக்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக ப்ரமோஷன் செய்யப்பட்டது...

ஏராளமான இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் இன்ஃப்ளுயன்ஸர்கள் பில்டப்புடன் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் விளம்பரம் வெளியிட்டு வந்தனர்..

இதனை சமூக வலைத்தளத்தில் கண்ட மக்கள் பலர், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே திரண்டனர்.

விற்பனையின் முதல் நாளே கூட்டம் கூடிய சூழலில், கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால் பாதியிலேயே மூடக்கூறி போலீசார் தடுப்புகள் அமைத்து அறிவுறுத்தியுள்ளனர்.

இருப்பினும் 2ம் நாளும் விற்பனையைத் தொடங்க, காலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது..

இதனால் சம்பவ இடத்தில் சூளைமேடு போலீசார் குவிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தியதுடன், ஆஃபர் அறிவித்த நிர்வாகம்

முறையான அனுமதி பெறவில்லை எனக்கூறி விற்பனையை நிறுத்தியுள்ளனர்.

ஆனால் ஆஃபரை நம்பி வந்த மக்கள் சாலையிலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால், கடுங்கோபத்திற்கு ஆளாகினர்.

குறிப்பாக உள்அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அனுமதி தேவையில்லை என்றாலும், பார்க்கிங் வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கான ஏற்பாடுகளை உறுதி செய்யாமலும், அதற்கான அனுமதியை பெறவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசார் பலரை அறிவுறுத்தி அனுப்பி வரும் நிலையிலும், மெட்ரோ,பேருந்து, சொந்த வாகனங்களில் பொதுமக்கள் வந்த வண்ணம் இருப்பதால் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.

நிறுவனத்தின் உரிமையாளர்களை சூளைமேடு போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்களை வறுத்தெடுத்து வருகின்றனர் இணையவாசிகள்.

Tags:    

மேலும் செய்திகள்