தாயின் தூக்க மாத்திரையை போட்டு 4 வயது குழந்தை மரணம்? - கன்வின்ஸ் ஆகாத சென்னை போலீஸ்
சென்னை, தாம்பரம் அருகே... தாயின் தூக்க மாத்திரையை தவறுதலாக உட்கொண்டு 4 வயது பெண் குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அடுத்த சேலையூர் சந்தோஷபுரத்தை சேர்ந்தவர் அஸ்வினி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருந்த நிலையில், கணவர் குஜராத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் அஸ்வினியின் மூத்த மகனான ஹிரிதிவ் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அஸ்வினி மன உளைச்சலில் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக மருத்துவர்களின் பரிந்துரை பேரில் அஸ்வினி தூக்க மாத்திரை உட்கொண்டு வந்த நிலையில், அந்த மாத்திரையை அவரின் இளைய மகளான 4 வயது குழந்தை ஹார்த்ரா தவறுதலாக உட்கொண்டு உயிரிழந்ததாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளான அஸ்வினி, கணவருக்கு தகவல் தெரிவித்து விட்டும், கடிதம் எழுதி வைத்து விட்டும் பிளேடால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கழிவறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸ்வினியை அவரது தாய் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், குழந்தையின் இறப்பு குறித்து சந்தேகமடைந்திருக்கும் நிலையில், சம்பவம் கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.