திடீரென தொழிலை மாற்றிய ஐடி ஓனர் - கலர்.. கலர்.. சட்டை - தொடர் சம்பவம்- சிசிடிவியில் அம்பலமான உண்மை
கடன் தொல்லையால் திருடனாக மாறிப்போன ஐடி நிறுவன உரிமையாளரை, நடிகர் வடிவேலுவின் காமெடி பாணியில் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
சென்னை, தாம்பரம் அடுத்த பெருங்குளத்தூரில் காய்கறி கடை நடத்தி வரும் மூதாட்டி ஒருவரிடம், ஹெல்மட் அணிந்து காய்கறி வாங்குவது போல் நாடகமாடிய இளைஞர் ஒருவர், சட்டென மூதாட்டி அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளார். இது குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், சந்தேகத்திற்கும் இடமளிக்கும் வகையில் அப்பகுதியில் உலாவிய இரு சக்கர வாகனம் ஒன்றை நோட்டமிட்டனர். அதில், கலர் கலராக சட்டைகள் அணிந்து ஒரே இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் வந்து செல்வதை பார்த்து போலீசார் குழப்பமடைந்தனர். இதனிடையே, அனைத்து சிசிடிவி காட்சிகளிலும் இளைஞர்கள் ஒரே ஷூவை அணிந்திருப்பதை கண்டறிந்த போலீசாருக்கு, நடிகர் வடிவேல் பட பாணியில் இளைஞர் ஒருவர் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவர, அவரை கைது செய்தனர். விசாரணையில், கைதான இளைஞர் சென்னை, பெருங்குளத்தூரில் ஐடி நிறுவனம் ஒன்று நடத்தி வரும் சரவணக்குமார் என்பதும், கடன் தொல்லையால் அவர் திருட்டில் இறங்கியதும் தெரியவர, சரவணக்குமாரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.