கோடீஸ்வர கணவன் கதை முடிக்க கணவன் போலவே கிடைத்த பிச்சைக்காரர் - பெங்களூரை அதிரவைத்த மாஸ்டர் க்ரைம்
கோடீஸ்வர கணவனை கொலை செய்ய
கணவன் போலவே கிடைத்த பிச்சைக்காரர்
இறுதி சடங்கை முடித்த மனைவிக்கு அதிர்ச்சி போன்
பெங்களூரை அதிரவைத்த மாஸ்டர் க்ரைம்
பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் போட்ட மாஸ்டர் க்ரைம் பிளானால் ஒட்டு மொத்த மாநிலத்திலும் பரபரப்பாகி இருக்கிறது...என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..
சாலை விபத்தில் உயிரிழந்த தொழிலதிபர் பின்னணியில் பகீர்
பெங்களூரில் டயர் வியாபாரம் செய்து வந்த தொழிலதிபர் முனிசாமி கவுடா சாலை விபத்தில் உயிரிழந்ததாக அவரது மனைவிக்கு போலீசாரிடம் இருந்து தகவல் வர ....ஒட்டுமொத்த குடும்பத்திலும் பேரிடியாக இறங்கி இருக்கிறது அந்த செய்தி..
சோகத்தில் இருந்த குடும்பத்தினரிடம் முனிசாமி கவுடாவின்
உடலை பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது மனைவியிடம் உடலை ஒப்படைத்தனர். தனது கணவனுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளைச் சோகத்துடன் முடித்ததார் மனைவி ஷில்பா ராணி.
திடீரென உதவி ஆய்வாளர் ஒருவரிடம் இருந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து ஒரு தகவல் வர ஒரு நொடியில்... ஒட்டுமொத்த சம்பவம் தலைகீழாக மாறியது.
முனிசாமி கவுடா தொழிலை விரிபடுத்துவதற்காக பலரிடம் கடன் வாங்கி இருக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை கட்டமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். மேலும் கடன் கொடுத்தவர்களும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
அப்போது தான் அந்த விபரீத எண்ணம் முனிசாமி கவுடாவுக்கும் அவரது மனைவி ஷில்பா ராணிக்கும் தோன்றியுள்ளது .
தனது பெயரில் உள்ள விபத்து காப்பீட்டு தொகையான 2 கோடி ரூபாயை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் முனிசாமி கவுடா..
இதனை தொடர்ந்து கடகடவென மாஸ்டர் க்ரைம் பிளானை தயாரித்து இருக்கின்றனர்.. அதன்படி கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஓரளவுக்கு முனிசாமி கவுடாவின் உருவத்துடன் ஒத்துப் போகிற பிச்சைக்காரர் ஒருவரை தேர்வு செய்துள்ளனர். பின்னர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து அவரை நன்றாக குளிக்க வைத்து, முனிசாமி கவுடாவின் உடைகளைப் போட்டு விட்டுள்ளனர்.
கடந்த 12 ம் தேதி பிச்சைக்காரரைத் தனது காரில் ஏற்றிய முனிசாமி பெங்களூரில் இருந்து கொல்லரஹள்ளி கேட் என்னும் பகுதிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். அங்கு காரின் டயரை பஞ்சர் செய்துவிட்டு, உதவுமாறு பிச்சைக்காரரை அழைத்து இருக்கிறார். உதவுவதற்காக காரில் இருந்து இறங்கிய பிச்சைக்காரரை இரும்பு சங்கிலியால் கழுத்தை நெறித்து கொலை செய்து இருக்கிறார் முனிசாமி கவுடா..
இதன் பின்னர் உடலை காரினுள் போட்டுவிட்டு, தேபேந்திர நாயக் என்ற லாரி டிரைவர் மூலம் லாரியை, கார் மீது மோத விட்டு சாலை விபத்தில் முனிசாமி கவுடா உயிரிழந்தாக பக்கவாக ஸ்கெட்ச் போட்டு இருக்கிறார்.
இது பற்றி தகவல் கிடைத்த போலீசாரும் காரின் பதிவெண்ணை வைத்து உயிரிழந்தது முனிசாமி கவுடா என்ற முடிவுக்கு வந்தனர்.
தலைமறைவாக இருந்த முனிசாமி கவுடாவு, தனக்கான காப்பீடு பணம் எப்போது கிடைக்கும் என்பதில் குறியாக இருந்து இருக்கிறார். இதனிடையே யாரிடமும் தொடர்பு கொள்ளாத முனிசாமி கவுடா, தனது உறவினரான காவல் உதவி ஆய்வாளர் ஒருவரிடம் நடந்த விபரங்களை ஜாடை மாடையாக
சொல்லி காப்பீடு பணம் எப்போது கிடைக்கும் என்று கேட்டு இருக்கிறார்.
முனிசாமி மீது சந்தேகமடைந்த உதவி ஆய்வாளர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க
செல்போன் எண்ணை வைத்து முனிசாமியை போலீசார் சுற்றி
வளைக்க.. நடந்தவைகளை வாக்குமூலமாக அளித்து இருக்கிறார். தொடர்ந்து மனைவி ஷில்பா ராணி, லாரி ஒட்டுநர் தேபேந்திரநாத் நாயக் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பிச்சைகாரார் அடையாளங்கள் குறித்து விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.
காப்பீடு பணத்திற்காக போலீசாரையே ஏமாற்றி மாஸ்டர் க்ரைம் பிளான் போட்ட தொழிலதிபர் செய்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.