ஆவடி நாசர்... மாணவ பருவத்தில் திமுகவில் அரசியலை தொடங்கியவர்... கட்சியில் மாவட்ட செயலாளர்... மேயர்.. எம்.எல்.ஏ. என உயர்ந்தவர் 2021 தேர்தலில் முதல் முறையாக வென்ற போதே அமைச்சரானார்... அவருக்கு பால்வளத்துறை கொடுத்து அழகு பார்த்தது திமுக தலைமை... தொடக்கத்தில் ஆவினில் அவரது நடவடிக்கை பேசப்பட்டாலும், பொது இடங்களில் அவரது நடவடிக்கைகள் விமர்சனங்களை சம்பாதித்துக் கொடுத்தது.
திருமுல்லைவாயிலில் குடிநீர் குழாய் உடைப்பை தரையோடு தரையாக படுத்து கிடந்து ஆய்வு செய்தது, அர்ப்பணிப்பால் மக்கள் மத்தியில் பேசப்பட்டார்.
அமைச்சர்களின் செயல்பாடுகள் தன்னை தூங்கவிடாமல் செய்வதாக ஸ்டாலின் குறை கூறியிந்த நிலையில்தான் நிர்வாகிகளை நோக்கி கற்களை வீசி கவனிக்கப்பட்டார் ஆவடி நாசர்...
திருவள்ளூரில் முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டத்திற்கு நாற்காலிகளை கொண்டு வருவதில் தாமதம் ஏற்படவே, சொந்த கட்சி நிர்வாகிகள் என்றும் பார்க்காமல், ஆவடி நாசர் தரையில் கிடந்த கற்களை எடுத்து அவர்களை நோக்கி வீசியது சமூக வலைதளங்களில் வைரலானது.
எதிர்க்கட்சிகள் கடுமையாக வசைபாடிய நிலையில் அமைச்சர் நாசர் மீண்டும் பொது இடத்தில் நடந்துக்கொண்ட விதம் சலசலப்பை ஏற்படுத்தியது. திருத்தணியில் திமுக கூட்டத்தில் திருத்தணி எம்.எல்.ஏ.வின் உதவியாளர் சதீஷை மேடையில் ஆவடி நாசர் தாக்கியது இணையத்தில் டிரெண்ட் ஆனது. சதீஷ் மேடையில் நடந்து சென்ற போது தவறுதலாக கைப்பட்டு மைக் விழுந்துவிட்டது. அதனால் அத்திரமடைந்த ஆவடி நாசர் சதீஷை தாக்கியது அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இப்படி ஆவடி நாசர் சர்ச்சைகளில் சிக்கிய நிலையில், அவரது மகன் ஆசிம் ராஜா ஆவடியில் குட்டி அமைச்ச ராகவே வலம் வருகிறார் என்ற விமர்சனங்களும் புகைந்தது. ஆசிம் ராஜா ஆவடி நகராட்சி நிர்வாகத்தையே தனது கண்ட்ரோலில் வைத்திருந்ததாகவும் நிர்வாகிகள் மட்டத்தில் புகைந்தது. ஒருபடி மேலாக ஆசிம் ராஜா காவல்துறைக்கு சொந்தமான இடத்தையே ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்ததாக எழுந்த புகாரில், அவரது மாநகர செயலாளர் பதவி பறிக்கப் பட்டது.
இப்படி சர்ச்சைகளுக்கு மத்தியில் இரவோடு இரவாக அமைச்சர் நாசரின் அமைச்சர் பதவி காலி செய்யப் பட்டிருக்கிறது.