பாரீஸ் கார்னரில் ஆட்டோவை மடக்கி சோதனை போட்டு அதிர்ந்த போலீஸ்.. உள்ளே இருந்த பொருள்
சென்னையில் ஆட்டோ மூலம் கஞ்சா ஆயில் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பாரிமுனை, பிராட்வே, வடக்கு கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில், கஞ்சா ஆயிலை கும்பல் ஆட்டோக்களில் வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், பாரிமுனையில் வந்த ஆட்டோ ஒன்றை மடக்கி நடத்திய சோதனையில், 100கிராம் கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அந்தோணி மற்றும் கோபிநாத் ஆகியோரையும் கைது செய்தனர். விசாரணையில் பெரம்பூரை சேர்ந்த அருண் என்பவரிடம் இருந்து கஞ்சா ஆயிலை வாங்கியதாக இருவரும் வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், அருண் தலைமறைவாக இருப்பதை அறிந்த போலீசார், அவரின் வீட்டில் இருந்து 50 கிராம் கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அருணுடன் சேர்ந்து மேலும் சிலரை தேடி வரும் போலீசார், கும்பலின் பின்னணி குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.