அண்ணா பல்கலை. கண்டுபிடித்த அதிர்ச்சி தகவல்

Update: 2024-07-25 02:32 GMT

நடப்பு கல்வி ஆண்டில் 500-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் முறைகேடாக அங்கீகாரம் பெறுவதற்கு பதிவு செய்திருப்பதை அண்ணா பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் 211 பேராசிரியர்கள், 300-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முறைகேடாக பதிவு செய்துள்ளதை அறப்போர் இயக்கம் கண்டுபிடித்து வெளியிட்டது.

நடப்பு கல்வி ஆண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் எத்தனை பேர் பதிவு செய்திருக்கின்றார்கள் என்கின்ற விவரத்தை அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது.

அதில், 124 கல்லூரிகளில் சுமார் 500 பேராசிரியர்கள் போலியாக பதிவு செய்திருப்பதை அண்ணா பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், தமிழக அரசு பிரதிநிதி அடங்கிய விசாரணைக் குழுவை அமைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இந்த குழுவினர், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மற்றும் முறைகேடாக பதிவு செய்த பேராசிரியர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், பேராசிரியர்கள் வாழ்நாள் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றுவதை தடை செய்திடவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்