ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. வழக்கறிஞர்கள் போட்ட திட்டம்.. போலீசார் எடுத்த அதிரடி முடிவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டிருக்கும் 11 பேரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சென்னை எழும்பூர் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஐந்தாம் தேதி சென்னை, பெரம்பூரில் உள்ள தனது வீட்டருகே 8க்கும் மேற்பட்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக 8 பேர் அன்றிரவே போலீசில் சரணடைந்ததும், பின்னர் மூவரை போலீசார் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஆருத்ரா மோசடி விவகாரத்தில், ஆற்காடு சுரேஷூடன் ஏற்பட்ட மோதலால் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனிடையே, கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தை திட்டவட்டமாக மறுத்த ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள், இந்த கொலையின் பின்னணியில் வேறு காரணங்கள் இருப்பதாக கூறி தொடர் குற்றச்சாட்டை முன் வைத்து வந்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 11 பேரையும் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்குமாறு எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனூடே, நீதிமன்றத்தில் போராட்டம் நடத்த இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், சட்ட ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு கைதிகளை காணொலி மூலம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும், இதற்கு நீதித்துறை நடுவர் அனுமதி அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.