ஆண்டிப்பட்டி கடமலைக்குண்டு அருகே கோரையூத்து மற்றும் அதன் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை உணவாக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக வழங்கப்பட்ட ரேஷன் அரிசி பழுப்பு நிறத்தில் இருந்ததாகவும், அரிசிகளுக்கு இடையில் வெள்ளை நிறத்திலான அரிசிகள் இருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்து வழங்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். வெள்ளை நிற அரிசியை பல்லால் கடித்தபோது பல்லில் ஒட்டிக் கொள்வதாகவும், தண்ணீரில் போட்டால் மிதப்பதாகவும் கூறினர். ரேஷன் அரிசியை மட்டுமே உணவாக பயன்படுத்தி வருவதால் தங்களுக்கு தரமான அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.