ரூ.1000 உரிமை தொகை நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...
ரூ.1000 உரிமை தொகை நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...விண்ணப்பிக்கும் முன்பே திருடப்பட்ட தகவல்கள் - எப்படி நடந்தது இந்த மோசடி?
திருப்பூரில் நடைபெற்று வரும் போலி ஜிஎஸ்டி மோசடியால் ஏழைப் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை கூட கிடைக்கப்பெறாமல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்...திருப்பூர் மாவட்டம், பெத்தச்செட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டதால், அதன் விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பிய போது அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்பெண்கள் பெயரில் நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், பல கோடி ரூபாய்க்கு பணப்பரிவர்த்தனை நடப்பதாகவும், ஜிஎஸ்டி செலுத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏழைப் பெண்களான தங்கள் பெயரில் கோடிக் கணக்கில் பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாக கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு சிவக்குமார், கார்வேந்தன், விஜயகுமார், தமிழ்செல்வன் ஆகியோர் அப்பெண்களிடம் அரசு நலத்திட்டங்களை பெற்றுத் தருவதாகக் கூறி ஆதார், பான் அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பெற்றுச் சென்றுள்ளனர். இதனால், தங்கள் விவரங்களை கொண்டு போலியாக நிறுவனங்கள் நடைபெறுவதாக கணக்கு காண்பித்து, ஜிஎஸ்டி ரசீதுகள் தயாரிக்கப்பட்டிருக்குமோ என பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.