தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், எம்.ஃபில் மற்றும் பிஎச்டி படித்தவர்களுக்கு யுஜிசி விதிகளின்படி 15,000 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. அனைத்து மாநிலங்களிலும் இந்த நடைமுறை இருந்து வந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு, யுஜிசி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, பேராசிரியர்கள் அதிக ஊதியம் பெறுவதாக கூறி, ஊக்கத் தொகை நிறுத்தப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, 2018-ஆம் ஆண்டு யுஜிசி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, ஊக்கத்தொகை வழங்கலாம் என்று அறிவிப்பானை வெளியிட்டது. இதையடுத்து, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், மீண்டும் ஊக்கத்தொகை வழங்கி வரும் நிலையில், அப்போதை தமிழக அரசு, ஊக்கத்தொகை வழங்காமல் விட்டுவிட்டது. இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட ஊக்கத்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பேராசிரியர் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில், விடுமுறை எடுத்து போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் பேராசிரியர் குழு தெரிவித்துள்ளது.