வாங்காத பொருளுக்கு கடன்.. திடீர் மெசெஜ்ஜால் அதிர்ந்த மக்கள் - அம்பலமான பர்னிச்சர் கடை ஓனரின் மோசடி
வீட்டு உபயோக பொருட்களுக்கு கடன் பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பர்னிச்சர் கடை ஒன்று உள்ளது. இக்கடையில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கு சிலர் தங்களது அடையாள அட்டைகளின் நகல்களை கொடுத்து, தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் பெற விண்ணப்பித்துள்ளனர். அனைத்து விண்ணப்பங்களையும் வாங்கிக்கொண்ட கடை உரிமையாளர், லோன் கிடைத்ததும் பொருட்கள் தருகிறேன் எனக்கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் வாங்காத வீட்டு உபயோக பொருட்களுக்கு, லோன் வாங்கியது போல் தவணை தொகையை செலுத்துமாறு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களை பயன்படுத்தி தங்களது பெயரில் கடன் பெற்று மோசடி செய்ததாக கூறி வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கை சேலம் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவினர் மட்டுமே விசாரிக்க வேண்டும் என கூறி பாதிக்கப்பட்ட மக்களை வாழப்பாடி போலீசார் சேலத்திற்கு திருப்பி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. வீட்டு உபயோக பொருட்களுக்கு கடன் பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் வாழப்பாடி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.