வினாத்தாள் கசிந்த விவகாரம்.. "பிளான் 'B'-யை செயல்படுத்துவோம்" - அமைச்சர் அன்பில் மகேஷ்
12ஆம் வகுப்பு கணிதம் திருப்புதல் தேர்வு, பிளான் "B" கேள்வித்தாள் மூலம் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கணிதத் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் கசிந்தது. இது பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரை இதுபோன்று வினாத்தாள்கள் வெளியாகும்போது Plan A Or Plan B மூலம் முடிவுகள் எடுக்கப்படும் என்றும், அந்த வகையில் Plan B மூலம் கட்டாயமாக திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.