நடிகர் ஆர்யா மீது ரூ.70 லட்சம் மோசடி புகார்: நான் அவனில்லை என விளக்கமளித்த ஆர்யா
ஜெர்மன் தமிழ் பெண்ணிடம் 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகாரளிக்கப்பட்ட சார்பட்டா நாயகன் ஆர்யா, தற்போது, நான் அவனில்லை என நிரூபித்துள்ளார்.
நடிகர்கள் என்றாலே கிசுகிசு கிளம்புவது எளிது. ஆனால், அது உண்மையா? பொய்யா என தெரிவதற்குள் மின்னல் வேகத்தில் பரவி, சம்பந்தப்பட்டவரை சங்கடத்தில் ஆழ்த்திவிடும்.
இந்நிலையில், அண்மையில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் கலக்கிய முன்னணி கதாநாயகனான ஆர்யா, திடீரென நடிகை சாயிஷாவை திருமணம் செய்துகொண்டார்.
இனிதான மண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என சொல்லி முடிப்பதற்குள், ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவரின் குற்றச்சாட்டு, அவரை தவறாக சித்தரித்தது.
சமூக வலைதளத்தில் அறிமுகமான நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்வதாக கூறியதாகவும், அதை நம்பி, 70 லட்சம் ரூபாய் வரை கொடுத்ததாகவும், ஆனால், வேறொரு பெண்ணை திருமணம் செய்த ஆர்யா மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறும் அந்த பெண் பரபரப்பு புகார் ஒன்றை கூறினார்.
நடிகை சாயிஷாவை திருமணம் செய்த ஆர்யா, சந்தோசமாக வாழ்வார் என பார்த்தால், வாய்தாவில் ஆஜராகி, நான் அவனில்லை என விளக்கமளிக்கும் நிலைக்கு ஆளானார்.
ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ் பெண் அளித்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த வந்த மத்திய சைபர் கிரைம் குற்றப் பிரிவு போலீசாருக்கு, ஆர்யாவுக்கும், இந்த வழக்குக்கும் தொடர்பும் இல்லை என்பது உறுதியானது.
துல்லிய விசாரணையில், வட சென்னை பகுதியான புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான், நடிகர் ஆர்யாவை போல், சமூக வலைதளத்தில் இயங்கி ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ் பெண்ணிடம் 70 லட்சம் ரூபாய் பறித்தது அம்பலமானது. மோசடி நாயகனாக இயங்கிய முகமது அர்மானுக்கு, அவரது மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிப்பாக்கத்தில் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 1 மடிக் கணினி, ஒரு ஐபேட் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அர்மான் மற்றும் ஹுசைனி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திரை நட்சத்திரங்களின் மீதான மோகத்தில் மக்கள் ஏமாறுவதை பயன்படுத்தி நடந்த மோசடியில் இருந்து, நான் அவனில்லை என வெளிவந்திருக்கிறார், சார்பட்டா நாயகன் ஆர்யா...