நடிகர் தனுஷ் வழக்கு - உயர்நீதிமன்றம் நிபந்தனை
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி நிலுவைத் தொகையான 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாயை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென நடிகர் தனுஷூக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டு இருந்தது. இதில் 30 லட்சத்து 33 ஆயிரத்தை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மீதமுள்ள வரியை திங்கட்கிழமைக்குள் செலுத்த தயாராக இருப்பதாகவும், அதனால் வழக்கை முடித்துவைக்கும்படி கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறுக்கிட்டு, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ், என்ன வேலை என்பதை மனுவில், ஏன் மறைத்தார்? என கேள்வி எழுப்பி அதை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, வரியை செலுத்திவிட்டு வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாமே எனவும், அப்படி என்றால் உங்கள் நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும், இதுவரை வரி பாக்கி செலுத்தாத நிலையில் வாபஸ் பெற அனுமதிக்க முடியாது எனவும், இறுதி உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.
மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டியது தானே எனவும் கேள்வி எழுப்பினார்.ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் அல்லது சோப்பு வாங்கும் பொதுமக்கள், ஏழை, நடுத்தர மக்கள் கூட வரி செலுத்திதானே பயன்படுத்துகிறார்கள் எனவும்,பெட்ரோலில் ஜி.எஸ்.டி. கட்ட முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதியுங்கள், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள் என குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்துங்கள் என்றும் அறிவுறுத்தினார். எந்த தனிப்பட்ட ஒருவரையும் குற்றம்சாட்ட வேண்டுமென்பது தன் நோக்கம் அல்ல என்றும், அரசு விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி நடக்குமாறு அறிவுறுத்தினார். தனுஷின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியில் 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாய் செலுத்த வேண்டிய நிலுவை இருப்பதாக வணிகவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அப்போது தனுஷ் தரப்பில், கொரோனா காலம் என்பதால் திங்கட்கிழமைக்குள் இந்த தொகையை செலுத்தி விடுவதாக உறுதி அளிக்கப்பட்டது.ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மின்னணு பரிவர்த்தனையிலேயே நிலுவை வரியை செலுத்தப் போவதால் 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை வாபஸ் பெறும் தனுஷின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை முடித்து வைத்தார்.