தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு - கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சடலத்தால் பரபரப்பு
நாகர்கோவில் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலத்தை அடுத்த மறுகால்தலைவிளை என்ற ஊரை சேர்ந்தவர் தங்கராஜ். லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரின் மகன் சோபியான். பாலிடெக்னிக் படிப்பை முடித்துள்ளார். சம்பவத்தன்று சோபியான் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை பதிவேற்றி உள்ளார். இதைப் பார்த்த பெண்ணின் உறவினர்கள் திடீரென சோபியான் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளனர்.
இருதரப்பிலும் பிரச்சினை நீளவே, பெண் வீட்டார் சோபியானை மிரட்டி விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு சோபியான் மாயமானார். எங்கே சென்றார் என அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில் வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் சோபியான். கைகள் கட்டப்பட்ட நிலையில் சோபியானின் சடலம் கிடந்ததால் பல கேள்விகள் எழுந்துள்ளது. அவரை அடித்து கொலை செய்து விட்டு தொங்க விட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் வீட்டாரும் விசாரணை வளையத்திற்குள் உள்ள நிலையில் காதல் விவகாரத்தால் நடந்த கொலையா? எனவும் கேள்வி எழுந்துள்ளது.