கொரோனா பாதித்த நபர் பிடிபட்டார் - மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி
கொரோனா பாதிப்புடன் விழுப்புரம் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட டெல்லி இளைஞரை செங்கல்பட்டு அருகே போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
கடந்த மாதம், வேலை தேடி புதுச்சேரிக்கு வந்த டெல்லி இளைஞர் ஊரடங்கால் விழுப்புரத்தில் தஞ்சமடைந்த நிலையில் உடல் நல பாதிப்பால் விழுப்புரம் அரசு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா இல்லை என கூறி விடுவித்த நிலையில் ரத்த பரிசோதனையில் கொரோனா உறுதியானது.
எனவே 4 தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். தற்போது, செங்கல்பட்டு மாவட்டம், படாளம் பகுதியில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான காவல்துறையினர் சுற்றி வளைத்து அந்த இளைஞரை பிடித்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அந்த நபர் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த பூதப்பாண்டி என்பவருக்கு எஸ்.பி. ஜெயக்குமார் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். பிடிப்பட்ட நபர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.