வருமான வரி வழக்கை திரும்ப பெறக் கோரி சசிகலா சார்பில் மனு
தனக்கு எதிரான வருமான வரி வழக்கை திரும்பப் பெறக் கோரி, சசிகலா சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், வரியாக 48 லட்சம் ரூபாயை செலுத்த சசிகலாவுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம், சசிகலாவுக்கு எதிராக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து வருமான வரித்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2008ம் ஆண்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் பிறப்பித்த சுற்றறிக்கையின்படி, ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள வருமான வரி, அபராதம் தொடர்பான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பதால், தனக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற உத்தரவிடுமாறு கூறப்பட்டது. இதையடுத்து, வருவாய் தணிக்கை பிரிவு ஆட்சேபம் தெரிவித்தாலோ, நீதிமன்ற நிலுவை வழக்குகளையோ திரும்ப பெற முடியாது என வருமான வரித்துறை சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து, வருமான வரி துறையின் பதிலை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.