"5, 8 பொதுதேர்வு - தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன?"

ஐந்து மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை அரசு என்ன செய்ய போகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2020-01-30 19:06 GMT
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்தரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த புதிய முறையானது இடைநிற்றலுக்கு வழிவகுக்கும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு, தேர்ச்சி பெறவில்லை எனில் மறுதேர்வு நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

* மறுதேர்விலும் தேர்ச்சி பெறவில்லை எனில், அந்த குழந்தையின் நிலை என்ன? என அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

* மேலும், பொது தேர்வினை அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்துமா ? அல்லது பள்ளி கல்வி துறை சார்பில் அந்தந்த பள்ளிகளே நடத்துமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

* இதற்கு நேரடியாக பதிலளிக்காமல், பொதுத் தேர்வு விடைத்தாள்கள் அந்தந்த பள்ளிகளிலேயே திருத்தப்படுமா அல்லது வேறு பள்ளிகளிலா என்பது பரிசீலனையில் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

* இதையடுத்து,  இது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர், தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர், தொடக்கக்கல்வித்துறை இயக்குநர்  ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்