சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - கொலை நடந்த இடத்தில் பயங்கரவாதிகளிடம் போலீசார் விசாரணை
குமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொல்லப்பட்ட இடத்திற்கு, கைதான பயங்கரவாதிகள் இருவரையும் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவ்பிக் ஆகியோரை 10 நாள் காவலில் எடுத்த கன்னியாகுமரி போலீசார், நேசமணி நகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குற்றவாளிகளை எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் தம்பானூர் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது.
நெய்யாற்றின்கரையில் அவர்கள் தங்கி இருந்த வாடகை வீடு மற்றும் பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், மறைத்து வைத்திருந்த பை மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதனை தொடர்ந்து, வில்சன் கொலை செய்யப்பட்ட களியக்காவிளை சோதனைச் சாவடிக்கு இவருவரையும் அழைத்து சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இருவரும் எவ்வளவு தொலைவில் இருந்து சுட்டோம், எந்த வழியாக வந்தோம் என்பதை நடித்து காட்டினர். அப்போது, அங்கு கூடிய ஏராளமான பொதுமக்களால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.