உள்ளாட்சி தேர்தல் - இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம்
உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடையும் நிலையில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் அருகே அடியனூத்து பஞ்சாயத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை பெண் வேட்பாளர் நித்யா, மேள - தாளங்கள் முழங்க வாக்கு சேகரித்தார். பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜீவானந்தம் தமது சின்னமாக ஆட்டோ சின்னத்திற்கு நூறு ஆட்டோக்களில் ஊர்வலமாக சென்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கடலூர் மாவட்டத்தில் கோண்டூர் மற்றும் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி ஆகிய பகுதிகளில் அமைச்சர் எம்.சி சம்பத்தும் அதிமுக செய்தி தொடர்பாளரான வைகைச்செல்வனும் இணைந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில்
திமுக சார்பில் போட்டியிடும் வாக்காளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதே போல் கலசப்பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தார்.
ஆரணி ஓன்றியங்களில் திரு.வி.க.நகர் எம்.எல்.ஏவும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் தாயகம் கவி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் சிவானந்தம் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து, குன்னத்துர், ஒண்ணுபுரம், அத்திமலைபட்டு, அம்மாபாளையம் உள்ளிட்ட கிராமங்களிலும் தி.மு.க.வினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்