பிரபல தாதா மணிகண்டன் - சென்னையில் போலீசார் என்கவுண்டர் - என்ன நடந்தது ?
பிரபல தாதா மணிகண்டன் - சென்னையில் போலீசார் என்கவுண்டர் - என்ன நடந்தது ?
விழுப்புரம் மாவட்டம் குயிலா பாளையம் என்ற கிராமம் தான் மணிகண்டனின் சொந்த ஊர். 8 கொலை, 7 கொலை முயற்சி உள்ளிட்ட 27 வழக்குகள் இவர் மீது உள்ளன. ஒரு கட்டத்தில் திருந்தி வாழ முயன்ற தாதா மணிகண்டன் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி போலீசில் மனு அளித்தார். இனிமேல் குற்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்றும் உறுதி அளித்தார்.
இனிமேல் தப்பு செய்ய மாட்டேன் என கூறிய மணிகண்டன் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது. 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற காங்கிரஸ் பிரமுகர் ஜோசப், ரியல் எஸ்டேட் அதிபர் ரிலையன்ஸ் பாபு ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய நபராக அறியபட்ட மணிகண்டனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.இந்த நிலையில் சென்னை கொரட்டூரில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மணிகண்டன் தங்கியிருந்த தகவல் விழுப்புரம் போலீசாருக்கு கிடைக்கிறது. உடனே அங்கு விரைந்த தனிப்படை போலீசார் மணிகண்டன் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். கைது செய்ய முயன்ற போது ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபுவை பட்டா கத்தியால் மணிகண்டன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அருகில் இருந்த உதவி ஆய்வாளர் பிரகாஷ் தனது கை துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதில் மணிகண்டன் மார்பில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உயிரிழந்த மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் போலீஸார் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மணிகண்டன் தாக்கியதால் படுகாயமடைந்த ஆய்வாளர் பிரபு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காவல் துறை உயர் அதிகாரிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரிடம் உடல் நலம் விசாரித்தனர். மணிகண்டன் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல இருந்ததாக தகவல் கிடைத்ததாகவும் தற்காப்பிற்காகவே என்கவுன்ட்டர் செய்ததாகவும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஐஸ் ஹவுஸ் ஆனந்தன், வியாசர்பாடி வல்லரசு ஆகியோருடன் மணிகண்டனையும் சேர்த்து கடந்த 2 ஆண்டுகளில் சென்னையில் நடந்துள்ள மூன்றாவது என்கவுன்ட்டர் இதுவாகும்.