ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை தவிர பிற நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து 2 வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-09-05 11:16 GMT
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த கோரி கே.கே.ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹெல்மெட் அணிவது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என, மனுதாரர் தரப்பிடம், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அதுசம்பந்தமாக அறிக்கை அளிக்காவிட்டால், விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கருதி, வழக்கில் இருந்து மனுதாரரை நீக்கி விட்டு, தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, ஹெல்மெட் அணிவதில் பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளது எனவும் அந்த சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அப்போது, புதிய விதிகள் முழுமையாக அமல்படுத்தப்படுவதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் அதிகாரம் வழங்கி பிறப்பித்த அரசாணையை அவர் தாக்கல் செய்தார். விசாரணையின் முடிவில், பிற நகரங்கள், கிராமப்புறங்களில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்