முதலமைச்சர் தனிப்பிரிவில் இதுவரை 99% மனுக்கள் விசாரணை
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. அதனடிப்படையில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் குறைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.
பல முக்கிய பிரச்னைகளில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில் சிரமம் உள்ளதாலும், கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும் என்பதற்காகவும், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மனுக்கள் அளித்து வருகின்றனர்.
அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது முதலமைச்சரிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள், நடவடிக்கை எடுப்பதற்காக, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு 2 லட்சத்து 8 ஆயிரத்து 216 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 1 லட்சத்து ஆயிரத்து 693 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
99 ஆயிரத்து 969 மனுக்கள் விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 ஆயிரத்து 554 மனுக்கள் விசாரணை மற்றும் நடவடிக்கைக்காக நிலுவையில் உள்ளன.
இதன்மூலம் கடந்த ஆண்டு பொதுமக்கள் அளித்த மனுக்களில், 99 சதவீத மனுக்கள் விசாரிக்கப்பட்டு, 50 சதவீத மனுக்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த 19ம் தேதி வரை முதலமைச்சர் தனிப்பிரிவில் 1 லட்சத்து 20ஆயிரத்து 39 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 47 ஆயிரத்து 203 மனுக்கள் விசாரிக்கப்பட்டு, கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்பட்டுள்ளன.
41ஆயிரத்து 857மனுக்கள் விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 ஆயிரத்து 979 மனுக்கள் விசாரணை மற்றும் நடவடிக்கைக்காக நிலுவையில் உள்ளன.