திருவள்ளுர் மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சி எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத திருவள்ளுர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2019-07-18 20:49 GMT
திருவள்ளூர் மாவட்டம், பிடாரிதங்கல் கிராமத்தில் சட்டவிரோதமாக ஆழ் துளை கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக, சிவசங்கர் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் - சுப்பிரமணியம் பிரசாத் அம‌ர்வு, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை கண்டறிந்தால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உத்தரவு நகல் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கிடைக்கவில்லை என, அரசு தரப்பு கூறியது. இதனைக் கேட்ட நீதிபதிகள், மாவட்ட வருவாய் அதிகாரிகள் பத்திரிகை படிக்க மாட்டார்களா? என கேள்வி எழுப்பினர். உத்தரவு நகல் கிடைக்கவில்லை என அதிகாரி கூறுவது அபத்தமானது என்றும் ஒரு நாளைக்கு 200 லாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுத்து செல்வது காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் கண்களுக்கு தெரியவில்லையா?  என்று கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்வதற்கு உகந்தது எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். ஏதாவது ஒரு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தால் தான், அதனை மற்ற ஆட்சியர்களும், அதிகாரிகளும் பின்பற்றுவார்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர். இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பான வழக்குகளிலாவது, அதிகாரிகள் முறையாக பதிலளிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்து வழக்கை தள்ளி வைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்