காணாமல் போன முகிலன் கண்டுபிடிக்கப்பட்டார் : திருப்பதியில் போலீசார் அழைத்து சென்ற காட்சி வெளியானது
காணாமல்போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் மீட்ட ஆந்திர போலீசார் காட்பாடியில், தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு சென்ற முகிலன் திடீரென மாயமானார். இதை தொடர்ந்து முகிலனை மீட்கவேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த வழக்கை ரயில்வே போலீசாரும் , எழும்பூர் போலீசாரும் விசாரித்து வந்த நிலையில், முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், முகிலனை திருப்பதி ரயில் நிலையத்தில் மூன்று காவலர்கள் அழைத்து செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. இது உறுதி செய்யப்பட்டதால், முகிலனை தங்களிடம் ஒப்புடைக்குமாறு தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழக போலீசாரிடம் முகிலன் ஒப்படைப்பு : முகிலன் ஆதரவாளர்கள் முழக்கம் - பரபரப்பு
இதனையடுத்து, திருப்பதியில் இருந்து காட்பாடி ரயில்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட முகிலனை, தமிழக போலீசாரிடம் ஆந்திர போலீசார் ஒப்படைத்துள்ளனர். அங்கிருந்து போலீசார் முகிலனை அழைத்து சென்றபோது, அவரின் ஆதரவாளர்கள் சூழ்ந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முகிலனை விடுவிக்க கோரி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.