"புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்" - அமைச்சர் தங்கமணி தகவல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் உயர் கோபுர மின் கம்பிகளை மாற்றி புதை வட மின்கம்பிகளை அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி இதனை தெரிவித்தார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புதை வட மின்கம்பிகளை பொருத்தும் பணி தொடங்கி தற்போது நடைபெற்று வருவதாக அவர் கூறினார். நாகை மாவட்டத்தில் பல இடங்களில் துணை மின் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்றும், நிலம் கிடைக்கும் பட்சத்தில் விரைந்து துணை மின் நிலையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
சென்னை பாரிமுனையில் துணை மின் நிலையம் அமைக்க மூன்று ஆண்டுகளாக தான் கோரிக்கை வைத்து வருவதாகவும், அது குறித்து இந்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்படுமா என்று திமுக எம்.எல்.ஏ. சேகர் பாபு கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, பாரிமுனையில் மின் நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடம் காவல்துறைக்கு சொந்தமான இடம் என்றும், அங்கு துணை மின்நிலையம் அமைப்பதில் சட்ட சிக்கல் உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவதற்குள் இடம் கண்டறியப்பட்டு துணை மின் நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.