கருணை வேலை வாய்ப்பு - அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் கருணை வேலை வாய்ப்பு திட்டத்தை சீராய்வு செய்து அனைத்து துறைகளிலும் அமல்படுத்தவது குறித்து வழிக்காட்டுதலை உருவாக்க தமிழக தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு பள்ளி ஒன்றில் பணிபுரிந்த ஸ்ரீனிவாசன், கடந்த 2001ஆம் ஆண்டு பணியின் போது உயிர் இழந்தார். இதனால் கருணை வேலை கேட்டு அவரது மகள் பரணி சக்தி அரசிடம் 2006-ல் அளித்த மனுவை கல்வித்துறை அதிகாரிகள் நிராகரித்தனர். அதிகாரிகள் தமது மனுவை நிராகரித்ததை தவறு என்று அறிவித்து, கருணை வேலை வழங்கக்கோரி பரணி சக்தி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் கருணை வேலை வழங்கும் போது சம்பந்தப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரிப்பதில் அதிகாரிகள் எவ்வித சமரசத்துக்கும் இடமளிக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார். ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே கருணை வேலை வழங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய நீதிபதி கருணை வேலையை சட்டப்பூர்வ உரிமையாக யாரும் கோர முடியாது என்று தெரிவித்தார். கருணை வேலைவாய்ப்பு திட்டத்தால் மற்றவர்களின் வேலைவாய்ப்பு பறிபோகக்கூடாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இதனால் தமிழகத்தில் கருணை வேலை வாய்ப்பு திட்டத்தை தலைமை செயலர் முழுமையாக சீராய்வு செய்து, அரசியலமைப்பு கொள்கைக்கு ஏற்ற வகையில் அனைத்து துறைகளிலும் அமல்படுத்தும் வகையில் வழிகாட்டுதல்கள் உருவாக்கி சுற்றறிக்கையை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.