தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க திட்டம்
தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள 316 விவசாய கிணறுகளில் இருந்து ஓரிரு நாட்களில் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள 316 விவசாய கிணறுகளில் இருந்து ஓரிரு நாட்களில் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, வீராணம் ஏரியில் இருந்து தினசரி 180 மில்லியன் லிட்டர் தண்ணீரும், மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் 150 மில்லியன் லிட்டர் தண்ணீரும் எடுக்கப்படுகிறது. பூண்டியிலிருந்து 55 மில்லியன் லிட்டர் தண்ணீரும் சென்னையின் குடிநீர் தேவைக்காக பெறப்பட்டு வருகிறது. மேலும்,140 விவசாயக்கிணறுகளில் இருந்து 55 மில்லியன் லிட்டர் தண்ணீரும் பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த அளவு போதாது என்பதால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 316 விவசயாக்கிணறுகளில் இருந்து நீர் எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 95 மில்லியன் லிட்டர் தண்ணீரை எடுத்து ஓரிரு நாட்களில் சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தவுள்ளனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பதிவு செய்யும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டு தேவைக்கு ஏற்ப குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் குறுகிய தெருக்களில் தண்ணீர் விநியோகிக்கும் 2 ஆயிரம், 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளின் எண்ணிக்கையை 140 லிருந்து 300 ஆக உயர்த்தவும் சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. லாரிகள் செல்ல முடியாத குறுகிய சந்துகளில் குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டு கோடை காலத்தில் 8 ஆயிரம் லாரிகள் கொண்டு விநியோகிக்கப்பட்ட தண்ணீர் இந்தாண்டு 9 ஆயிரத்து100 லாரிகள் மூலம் விநியோகிக்கப்படுவதாகவும் மக்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் அரசின் சார்பாக எடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.