மக்களவை தேர்தல் : திமுக கடந்து வந்த பாதை
2019 ஆம் ஆண்டிற்கான மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் திமுக 36 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில், திமுக 23 புள்ளி 6 சதவிகித வாக்குகள் பெற்றும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதன் கூட்டணி கட்சிகளான, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளுக்கும் வெற்றி கிடைக்க வில்லை. மற்றொரு பக்கம் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. அதே சமயம், 2019 - ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலில், கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி, ராகுல் காந்தியுடன் கனிமொழி சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியையும் சேர்த்து மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மக்களவை தேர்தலில், திமுக, 20 தொகுதிகளில் களமிறங்கியது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள் ஆகிய 3 கட்சிகளும் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டன. மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதிகளிலும் களமிறங்கின. கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது அரசியலில் பெரும் புயலை உருவாக்கியது. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என திட்டவட்டமாக மறுத்த
தேமுதிக பொருளாளர் பிரேமலதா, திமுக குறித்தும், துரைமுருகன் குறித்தும், அதிரடியான பல கருத்துக்களை செய்தியாளர் சந்திப்பில், பதிவு செய்து, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஏப்ரல் மாதம் 16 -ஆம் தேதி, தூத்துக்குடியில் கனிமொழியின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை - வேலூர் மக்களவை தேர்தல் தள்ளிவைப்பு என திமுகவுக்கு கடும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றிய கடிதங் களில், தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரது புகைப்படங்களை பொறித்தது குறித்து தேர்தல் ஆணையத் திடம் திமுக புகார் அளித்தது. இதுதவிர இரட்டை இலைக்கு வாக்களிப்பவர்களுக்கு மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் அளிப்பதாக வாக்குறுதி அளித்த அமைச்சர் D. ஜெயக்குமார் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் கொடுத்தது. கடந்த மக்களவை தேர்தலில் பூஜ்யம் என்ற எண்ணிக்கை யில் இருந்து இந்த முறை, 36 தொகுதிகள் வரை கைப்பற்ற அதிக வாய்ப்பு உருவாகி உள்ளது. தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் சூறாவளி பிரசாரம், அக்கட்சிக்கு "கை" கொடுத்துள்ளது.