"நீதிமன்றம் விதித்த தடை பிரபு-வுக்கும் பொருந்தும்" - தமிழக சட்டப்பேரவை செயலகம் விளக்கம்
சபாநாயகர் நோட்டீஸுக்கு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு விளக்கம் அளிக்க தேவையில்லை என தமிழக சட்டப்பேரவை செயலகம் விளக்கம் அளித்துள்ளது.
அரசு கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், எம்.எல்.ஏக்கள் ரத்னசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து, எம்.எல்.ஏக்கள் ரத்னசபாபதி, கலைசெல்வன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சபாநாயகர் நோட்டீசுக்கு தடை விதித்தது. எம்.எல்.ஏ பிரபு வழக்கு தொடரததால், உச்சநீதிமன்ற உத்தரவு அவருக்கு பொருந்துமா என கேள்வி எழுந்தது. இது தொடர்பாக எம்.எல்.ஏ பிரபுவின் வழக்கறிஞர் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்தார். உச்சநீதிமன்றம் அளித்த தடை தனக்கும் பொருந்தும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு வேளை இந்த தடை பொருந்தாவிட்டால் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும், அதற்கு ஒரு வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த தடை பிரபுவுக்கும் பொருந்தும் என்பதால் அவர் விளக்கம் அளிக்க தேவையில்லை என சட்டப்பேரவை செயலகம் விளக்கம் அளித்துள்ளது