10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் ஒட்டு மொத்தமாக 95 புள்ளி 2 சதவீத மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
2018-19 கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதி நிறைவுபெற்றது. 12 ஆயிரத்து 548 மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து மாணவர்கள், தனித் தேர்வர்கள் உள்பட மொத்தம் 9 லட்சத்து 79 ஆயிரத்து 19 பேர் இந்த தேர்வை எழுதினர். இதற்கான முடிவுகள் இன்று வெளியானது. ஒட்டு மொத்தமாக 95 புள்ளி 2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93 புள்ளி மூன்று சதவீதமும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 3 புள்ளி ஏழு சதவீதம் அதிக தேர்ச்சி கண்டுள்ளனர். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மே-2ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தனி தேர்வர்கள் மே-6ஆம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.