இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி : பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்
பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமானம் மூலம் கேரளா வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மதுரை - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை, மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்கள், பணகுடி - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை என மொத்தம் 2 ஆயிரத்து 995 ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை, புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணி, மதுரை - செட்டிக்குளம் தேசிய நெடுஞ்சாலை, செட்டிக்குளம் - நத்தம் தேசிய நெடுஞ்சாலை, கன்னியாகுமரி சாலை பாதுகாப்பு பூங்கா மற்றும் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், எழும்பூர்- மதுரை இடையிலான தேஜஸ் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.