மேகதாது விவகாரம் : ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-12-06 12:30 GMT
* காவிரி படுகையில் தமிழகத்தின் அனுமதியின்றி எந்தக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என, கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், சட்டப்பேரவையில் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதியும், 2015ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதியும், கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

*  இதனைக் கருத்தில் கொள்ளாமலும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு கீழ்படுகை மாநிலங்களின் முன்அனுமதி பெறாமலும், கர்நாடக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்பது மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ஆரம்பக்கட்ட பணிகளை துவக்க உள்ளதற்கும், புதிய அணை கட்ட மத்திய நீர்வளக் குழுமம் கடந்த நவம்பர் 22ஆம் தேதி அனுமதி வழங்கியதற்கும், சட்டப்பேரவை கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும்  தெரிவித்துக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. 

* மத்திய நீர்வளக் குழுமம் வழங்கிய அனுமதியை திரும்பப் பெற அக்குழுமத்திற்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் இந்த சட்டப்பேரவை வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில் காவிரி படுகையில் மேகதாது அல்லது வேறு எந்தவொரு இடத்திலும் தமிழகத்தின் அசைவின்றி எந்தக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்