"சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல மாட்டேன்" - பெலாரஸ் தடகள வீராங்கனை கிரிஸ்டினா
டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட வந்த தடகள வீராங்கனை ஒருவர் தனது சொந்த நாட்டுக்கு திரும்பபோவதில்லை என கூறியிருக்கிறார். உலகை அதிர்ச்சியடைய செய்திருக்கும் இச்சம்பவத்தில் நடப்பது என்ன என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.
கவலை தோய்ந்த முகத்துடன், ஏதோ ஒரு தவிப்புடன் டோக்கியோ விமான நிலையத்தில் காணப்பட்ட இந்த இளம்பெண் பெலாரஸ் நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனை கிரிஸ்டினா திமனோவ்ஸ்கயா.
பெலாரஸுக்கு செல்லும் விமானத்தில் ஏற மறுத்த கிரிஸ்டினா,. தன்னை பெலாரஸ் அதிகாரிகள் கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றம் சாட்டியதும், டோக்கியோ விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக பாதுகாப்புடன் ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கிரிஸ்டினா....
இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து விரிவான தகவலை வெளியிட்ட கிரிஸ்டினா, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் விளையாட வந்த தன்னை, அதிகாரிகள் 400 மீட்டர் ஓட்டபந்தயத்தில் விளையாட கட்டாயப்படுத்தியதாக கூறினார்.
எல்லா முடிவுகளும் திரைமறைவாக தனக்கு பின்னால் எடுக்கப்பட்டதாகவும் கூறிய அவர், இந்த பிரச்சினையில் ஒலிம்பிக் கமிட்டி தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் இதனை மறுத்த பெலாரஸ் அதிகாரிகளின் போக்கை விமர்சித்த கிரிஸ்டினா, தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், சொந்த நாட்டுக்கு திரும்ப போவதில்லை என்றும் கூறினார்.
இதனையடுத்து பெலாரசில் அதிபர் அலெக்ஸாண்டர் லூகஷென்கோ அரசை, அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. ஐரோப்பிய நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.
தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக கூறிய கிரிஸ்டினாவுக்கு அடைக்கலம் கொடுக்க போலந்து அரசு முன்வந்தது.
இதனையடுத்து விசாவுக்கு விண்ணப்பம் செய்த கிரிஸ்டினா, டோக்கியோவில் உள்ள போலந்து தூதரகத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார். அங்கு ஜப்பான் அரசு பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறது.
26 ஆண்டுகளாக பெலாரசை ஆட்சி செய்யும் அதிபர் அலெக்சாண்டர் லூகஷென்கோ ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என்றே விமர்சனம் செய்யப்படுகிறார்.
கடந்த மே மாதம் அரசை விமர்சனம் செய்த பத்திரிக்கையாளர் சென்ற விமானத்தை, நடுவானில் இடைமறித்து, அவரை பெலாரஸ் அதிகாரிகள் கைது செய்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.