`சனாதன'மும் - அமைச்சர் உதயநிதியும்.. பாஜக தலைவர் வெளியிட்ட அறிக்கை - தேசிய அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு

Update: 2023-09-12 10:31 GMT

சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் திட்டமிடப்பட்ட யுக்தியின் ஒரு அங்கம் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்...

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நட்டா, மும்பையில் இந்திய கூட்டணியின் கூட்டம் நடைபெற்ற 2 நாட்களுக்குப் பிறகு சனாதன தர்மம் பற்றி உதயநிதி பேசியிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து சனாதன தர்மம் பற்றி பிரியங்க் கார்கே பேசியதாகவும் தெரிவித்துள்ளார்... சனாதன தர்மத்தை எதிர்த்து இந்தியக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என தற்போது திமுக அமைச்சரே ஒப்புக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இவை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் நன்கு திட்டமிடப்பட்ட யுக்தியின் ஒரு அங்கம் என குற்றம் சாட்டியுள்ள அவர், இந்த விவகாரத்தில் இந்திய கூட்டணி தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவிப்பது அரசியல் சாசனத்தின் படி சரியா? என்பதை அவர்கள் கூற வேண்டும் என தெரிவித்துள்ள நட்டா, இந்திய கூட்டணியினர் இந்திய அரசியலமைப்பில் உள்ள சரத்துக்களை அறிந்திருக்கவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

"அன்பின் கடை" என்ற பெயரில் சனாதன தர்மத்திற்கு எதிரான வெறுப்பு பொருட்களை விற்பனை செய்வது ஏன் என்பதை அவர்கள் கூற வேண்டும் என வலியுறுத்தியுள்ள நட்டா, ஆட்சி அதிகாரம் மற்றும் பிளவுபடுத்துவதற்காகவே வெறுப்பின் இந்த மிகப்பெரும் கடை அமைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்