பஞ்சாப்பில் காங். தோல்விக்கு காரணம் என்ன?

விவசாயிகள் போராட்டத்தை அடுத்து நடைபெற்ற 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏறலாம் என எதிர் பார்க்கப்பட்ட பஞ்சாப்பில் அக்கட்சி தோல்வியை தழுவியிருக்கிறது.

Update: 2022-03-11 02:47 GMT
2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பின்னர் பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்து வந்தது. தொடர் தோல்வியால் துவண்டு கொண்டிருந்த காங்கிரசுக்கு அப்போது புத்துயிரூட்டியது பஞ்சாப்.  

2017 ஆம் ஆண்டு பஞ்சாப்பில் சிரோமணி அகாலிதளம்-பா.ஜ.க. கூட்டணியை தோற்கடித்து மொத்தமுள்ள 117 இடங்களில் 77 இடங்களை வென்ற காங்கிரஸ், 10 ஆண்டுகளுக்கு பின்னர் மாநிலத்தில் அரியணை ஏறியது. 

மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு கேப்டனாக பணியாற்றிய முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் முதல்வராக பதவியேற்றார். உட்கட்சி பூசலுக்கு மத்தியிலும் ஆட்சிக்கு களங்கம் ஏற்படாது காங்கிரஸ் கப்பலை இயக்கினார் கேப்டன் அமரிந்தர் சிங். 

இதன் பயனாக 2019 நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப்பில் 40.12 சதவீத வாக்குகளுடன் காங்கிரஸ் 13 நாடாளுமன்ற தொகுதிகளில் 8 தொகுதிகளை கைப்பற்றியது.

இதற்கிடையே 2020 ஆம் ஆண்டு இறுதியில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. 

அப்போது விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்த அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மீண்டும் பஞ்சாப்பில் ஆட்சிக்கு வரும் என பலரும் ஆரூடம் கூறினர். ஆனால், இதற்கு பாதகமாக, உட்கட்சி பூசல் எரிமலையாக வெடித்தது.

அமரிந்தர் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்து. அந்தச் சண்டையில் கட்சி மேலிடத்தின் முடிவை ஏற்காத அமரிந்தர் சிங், முதல்வர் பதவியை துறந்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி, பாஜகவுடன் கை கோர்த்தார். காங்கிரஸ் தலித் சமூகத்தை சேர்ந்த சரண்ஜித் சிங்கை பஞ்சாப் முதல்வராக்கியது. அப்போதும் உட்கட்சி பூசல் ஓயவில்லை. சரண்ஜித்துக்கும், சித்துவுக்கும் இடையிலான மனக்கசப்பு வெளிப்பட்டது.

மறுபுறம் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க துடித்த ஆம் ஆத்மி, காங்கிரசின் உட்கட்சி பூசல்களையும், தோல்விகளையும் குறி வைத்து பிரசாரம் செய்தது. 

2017 ஆம் ஆண்டு எப்படி காங்கிரஸ் இளைஞர்கள் வாக்கை அறுவடை செய்ததோ, அதே போல இம்முறை இளைஞர்கள் வாக்குகளை தனதாக்கிய ஆம் ஆத்மி, அமோக வெற்றியை பெற்றிருக்கிறது.

மறுபுறம் அமரீந்தர் சிங்கும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பிரிக்க, தேர்தலில் தோல்வியை தழுவிய காங்கிரஸ், ஆட்சியையும் இழந்தது. 

காங்கிரசின்  இந்தத் தோல்விக்கு உட்கட்சி மோதலே காரணம் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குரிந்தர் சிங் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்