உ.பி.யில் போராடி தோற்ற சமாஜ்வாடி - பலனளிக்காத "சிங்கிள் மேன்" பிரசாரம்

உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் மேஜிக்கிற்கு முன்னால் சமாஜ்வாடியின் பிரசாரம் கை கொடுக்காமல் போனது எப்படி என்பதை அலசும் ஒரு தொகுப்பை காணலாம்...

Update: 2022-03-11 02:17 GMT
உத்தரபிரதேசத்தில் பாஜக பெரும் பலத்துடன் ஆட்சி அமைத்தாலும் அங்கே வலுவான எதிர்க்கட்சியாக நிற்கிறது சமாஜ்வாடி. ஒரு காலத்தில் மொத்த உத்தர பிரதேசத்தையும் ஆட்சி செய்த கட்சிதான் சமாஜ்வாடி. கடந்த 2017 ஆம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியில் குடும்பச் சண்டை தலைவிரித்து ஆடிய போது, எதிர்பாராத விதமாக பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. அடுத்து வந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தனது பரம எதிரியான மாயாவதியுடன் கூட கூட்டணி வைத்தார் கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ். ஆனால், அந்த வியூகம் பலனளிக்கவில்லை.

இதனையடுத்து 2022 சட்டப்பேரவை தேர்தலுக்காக பணியாற்றிய அகிலேஷ் யாதவ், தேர்தல் தொடங்குவதற்கு முன்பு பாஜக கூட்டணியிலிருந்த ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியையும், 12  பாஜக எம்.எல்.ஏ.க்களையும் தன் பக்கம் இழுத்து அதிரடி காட்டினார். 

சிறு, சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்த அகிலேஷ் யாதவ் பல தரப்பினரையும் வேட்பாளராக களமிறக்கினார். ஆனால் பிரசாரம் என்றபோது களத்தில் சிங்கிள் மேனாகவே காணப்பட்டார். 

உடல்நலம், அவரது தந்தை முலாயம் சிங் யாதவை பிரசாரத்திலிருந்து விலக்கியது. அகிலேஷ் யாதவ் மட்டுமே நட்சத்திர பிரசார தலைவர் என்பது அவருக்கு கூடுதல் சுமையையும், சவாலையும் ஏற்படுத்தியது. மறுபுறம் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா, யோகி ஆதித்யநாத் என பாஜக தலைவர்கள் உத்தரபிரதேசத்தை முற்றுகை இட்டு பிரசாரம் செய்தனர். ஆனால் அவர்களுக்கு சரியான பதிலடியை கொடுக்க முடியாத சூழல் அகிலேஷ் யாதவுக்கு ஏற்பட்டது. 

செல்லும் இடங்களில் எல்லாம் தொண்டர்கள் கூட்டம் அவரை திக்குமுக்காட செய்தாலும், சில இடங்களில் அவர்களது நடவடிக்கை முகம் சுழிக்கச் செய்தது. கான்பூரில் பிரதமர் மோடி கூட்டத்தில் சமாஜ்வாடி தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டதை தொடர்ந்து 'சமாஜ்வாடி குண்டர்கள்' என்ற கோஷத்துடன் பாஜக பிரசாரம் செய்தது. 

கொரோனா காலத்தில் பாஜக ஆன்-லைன் பிரசாரத்திற்கு சமாஜ்வாடியால் ஈடு கொடுக்க முடியாத சூழலும் ஏற்பட்டது. சமாஜ்வாடிக்கு ஆதரவாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்தாலும், அது தங்களுக்கு பாதகமாகவே அமையும் என சமாஜ்வாடி கட்சித் தலைவர்களே அதிருப்தி கொண்டிருந்தனர். 

இப்படி பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை சந்தித்த சமாஜ்வாடி கட்சியால், 2017 ஆம் ஆண்டு பாஜகவிடம் பறிகொடுத்த ஆட்சியை திரும்பப்பெற முடியவில்லை. ஆனால் கடந்த 2017 தேர்தலில் 47 இடங்களில் மட்டும் வென்ற சமாஜ்வாடி தற்போது 111/ 112/ 113 /114 இடங்களில் வென்றிருக்கிறது. இது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் புதிய உக்தியுடன் களமிறங்க அகிலேஷுக்கு உத்வேகம் அளிக்கும் என்பதே அரசியல் விமர்சகர்கள் கருத்தாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்