அ.ம.மு.க.வுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிக்கு உதவிய குக்கர் சின்னத்தை டிடிவி தினகரனுக்கு வழங்க உத்தரவிட மறுத்த உச்சநீதிமன்றம், அவருக்கு பொதுச்சின்னத்தை ஒதுக்க பரிசீலனை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. அந்தக் கட்சி சார்பில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் ஒரே சின்னம் அதுதான்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஏதாவது ஒரு சின்னம் ஒதுக்கியாக வேண்டும் என்ற வகையில், அமமுகவிற்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்
பரிசு பொருள் திட்டம் ஜெயலலிதா கடைசியாக அறிவித்த திட்டம். ஆர்.கே. நகரைப் போல் வெற்றி பெற்றுத் தரும் சின்னமாக இது இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார், டிடிவி தினகரன்.
தினகரன், அமமுக, துணை பொதுச் செயலர்
அமமுக கட்சிக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சுயேட்சைகளாகத்தான் கருதப்படுவார்கள் என்றும், சுயேட்சைகள் 500 வாக்குகள் பெற்றாலே அதிசயம் என்றும் அமைச்சர் ஜெயக்குமாரும், தினகரனால் ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூவும் குறிப்பிட்டுள்ளனர்.
செல்லூர் ராஜூ, அமைச்சர்
எதிரிகள் மற்றும் துரோகிகளுக்கு , பரிசுப் பெட்டி சின்னம் பாடம் சொல்லும் என, ஒசூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
புகழேந்தி, வேட்பாளர்-அ.ம.மு.க
அமமுகவுக்கு குக்கர் கிடைக்காத நிலையில், எந்த சின்னம் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் அதிகமாகப் பேசப்பட்டது. இது அவர்களுக்கு குக்கரை போல் விசிலடிக்குமா என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்.