யாரும் அறியா கஸ்தூரி வாழ்வின் சோக பிண்ணனி...கைதாகி நீதிபதி முன் நிற்கும் போது சொன்ன வார்த்தை
யாரும் அறியா கஸ்தூரி வாழ்வின் சோக பிண்ணனி... கைதாகி நீதிபதி முன் நிற்கும் போது சொன்ன வார்த்தை - வைரலாகும் வீடியோ
பிராமணர்கள் சார்பில் நடந்த கூட்டத்தில், தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான, நடிகை கஸ்தூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..
ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரியை சென்னை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள்.. இப்படி போலீசார் கைது செய்வதற்கு முன்னதாக, நான் ஒன்னும் ஓடி ஒளியவில்லை. சூட்டிங்கிற்காகவே ஹைதராபாத்தில் உள்ள எனது வீட்டிற்கு வந்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.
தெலுங்கு மக்களை அவதூறாக பேசிவிட்டு, தெலங்கானாவிலேயே போய் ஒளிந்து கொண்டிருந்த கஸ்தூரி என சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்த மீம்ஸ்களுக்கு இந்த வீடியோ மூலம் பதிலளித்துள்ளார், கஸ்தூரி.. இருப்பினும், இந்த வீடியோக்களை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் X பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அனுமதியின்றி போராட்டம் செய்த விவகாரத்தில், அவரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை கஸ்தூரி பேசிய இந்த வீடியோக்கள் அர்ஜூன் சம்பத்தின் X பக்கத்தில் வெளியாகியிருப்பது கவனிக்கத்தக்கது..
கஸ்தூரியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைக்கு பின்பு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் எழும்பூர் உதவி ஆணையர் ஜகதீசன் சுமார் ஒரு மணி நேரம் துருவி துருவி விசாரணை செய்தார்.
பலத்த பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்ற 5-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் ரகுபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.. இதனிடையே, அரசியல் அராஜகம் ஒழியட்டும்.. நீதி வெல்லட்டும் என நடிகை கஸ்தூரி, முழக்கமிட்டு கொண்டே சென்றது நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, "நான் சிங்கிள் மதர். எனக்கு ஸ்பெஷல் சைல்ட் உள்ளார். அவரை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆகவே, என்னை சொந்த ஜாமீனில் விட வேண்டும்" என மேஜிஸ்ட்ரேட் முன்பு நடிகை கஸ்தூரி வேண்டுகோள் வைத்தார்.
ஆனால், இதற்கு மறுத்த மேஜிஸ்ட்ரேட், நவம்பர் 29ஆம் தேதிக்கு வரை நடிகை கஸ்தூரியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.. இதையடுத்து அவரை போலீசார் வெளியே அழைத்துவந்த போது, ஒரு அரசியல் கட்சி தலைவரைப் போல, மீண்டும் அரசியல் அராஜகம் ஒழியட்டும்.. நீதி வெல்லட்டும் எனக் கைகளை ஆட்டியபடியே நடிகை கஸ்தூரி வண்டியில் ஏறினார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய கஸ்தூரி, இது அரசியல் பழிவாங்கல், தான் எதிர்பார்த்தது தான் இது எனத் தெரிவித்தார்.. அதேபோல, போலீசாரிடம், நீங்க எல்லாரும் எனக்கு நல்லது பண்ணிருக்கீங்க... அத நான் திருப்பி கொடுக்கணும்ல... என கஸ்தூரி ஆதங்கத்துடன் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சமுதாயப் பெண்களை மிகவும் இழிவுபடுத்தும் விதமாகவும், தமிழர்கள் மற்றும் தெலுங்கர்கள் இடையே பிரிவினை வாதம் ஏற்படுத்துமாறு கொச்சையான சொற்களைப் பயன்படுத்தி பேசியதாகவும், நாங்கள் வெளியே செல்லும்போது எங்கள் காது படவே அடையாளம் தெரியாத சிலர் எங்கள் பெண்களைப் பார்த்து மறைமுகமாக விரிவாக பேசுகிறார்கள் எனவும் நடிகை கஸ்தூரி மீது பதியப்பட்ட எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.. மேலும், இது தொடர்பாக அகில இந்திய தெலுங்கு சம்மேளம் பொதுச்செயலாளர் நந்தகோபால் அளித்த புகாரின் பேரில் அவர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.