வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், 279 சடலங்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.வயநாட்டில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கேரள- கர்நாடக துணை வட்டார ஜெனரல் ஆபிஸர் கமாண்டிங் மேஜர் ஜெனரல் வினோத் மேத்யூ, இது தொடர்பாக விளக்கம் அளித்தார். 85 ஆண்கள், 74 பெண்கள், 27 குழந்தைகளின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஒரு சடலம் ஆணா பெண்ணா என்பது அடையாளம் காண முடியவில்லை என்றும், 17 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.100 சடலங்களின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பல சடலங்களில் உடல் பாகங்கள் வெவ்வேறாக காணப்பட்டதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை சரியாக கணக்கிட முடியவில்லை என்றும் தெரிவித்தார். மலப்புரத்தில் மீட்கப்பட்ட சடலங்கள், உடல் பாகங்கள் வயநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன. உடல் பாகங்கள் உட்பட 279 சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 96 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 129 பேர் சிகிச்சை முடிந்து முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வினோத் மேத்யூ தெரிவித்தார்.