மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள மனவர் நகரில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்திய கலாச்சாரத்தை காங்கிரஸ் கட்சி அவமதித்து வருவதாக குற்றம் சாட்டினார். நாட்டில் உள்ள கலாச்சார மையங்களை பிரதமர் மோடி புத்துயிர் பெற வைப்பதாக தெரிவித்த அமித்ஷா, மெட்ரோவுக்கு ராஜா போஜ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதையும், சாகர் மாவட்டத்தில் சாந்த் ரவிதாஸ்க்கு கோயில் கட்டியதையும் காங்கிரஸ் கட்சி எதிர்த்ததாக கூறினார். மத்தியப் பிரதேச மாநில மக்கள் மூன்று தீபாவளியை கொண்டாட உள்ளதாக கூறிய அமித்ஷா, நாளை ஒரு தீபாவளியும், டிசம்பர் 3ஆம் தேதி பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் இரண்டாவது தீபாவளியும், ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறந்த பிறகு மூன்றாவது தீபாவளியும் கொண்டாடுவார்கள் என்றார்.