ஒரு பேராசிரியர் 30 கல்லூரிகளில் பணியாற்றும் நிலை உள்ளதாக தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, இது எப்படி சாத்தியம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மதுரை தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற திருவாசகம் ஒப்புவித்தல் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் ஆளுநர்.ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், திராவிட மண்ணில் இருந்துதான், பக்தி இலக்கியம் தொடங்கி நாடு முழுவதும் சென்றடைந்ததாக தெரிவித்தார். ஆன்மீகமும் கல்வியோடு இருந்த நிலையில், தவறான விளக்கத்தை சொல்லிக்கொடுத்து, அடிப்படை பாடத்திட்டத்தையே அரசியல் சூழல் மாற்றிவிட்டதாகவும், அதனால், சொந்த நாட்டிலேயே அந்நியர்கள் போல உள்ளதாகவும் கூறினார். இன்றைய காலகட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் வணிக நோக்கத்தில் தொடங்கப்படுவதாக ஆளுநர் வேதனை தெரிவித்தார். ஒரு பேராசிரியர் 30 கல்லூரிகளில் பணியாற்றுவது போன்ற நிலை உள்ளதாகவும், இது எப்படி சாத்தியம்? இப்படி இருந்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் ஆளுநர் கூறினார்.