புதுச்சேரியில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டதில் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி சந்திரசேகரன் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், புதுச்சேரியில் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதில் உயர்நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நகரம் முழுவதும் வைக்கப்பட்ட பேனர்கள், கட் அவுட்கள் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத பேனர்கள், கட் அவுட்டுகள் குறித்து புகாரளிக்கும் வாட்ஸ் அப் எண் திரும்ப பெறப்பட்டிருக்கிறது என கூறியிருக்கும் அவர், சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுகளை கடைபிடிக்காத அதிகாரிகள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார். சாலை விபத்துகளை தவிர்க்கவும், விலைமதிப்பற்ற உயிருக்கு அச்சுறுத்தலை தவிர்க்கவும், பொதுமக்களின் நலனை பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கவும் புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் மீது அவமதிப்பு நடவடிக்கை உடனே தொடங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.