வயநாடு நிலச்சரிவால் இறந்த உடலை தகனம் செய்ய 75 ஆயிரம் ரூபாய் செலவிட்டதாக கேரள அரசு வெளியிட்ட தகவலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது
வயநாடு நிலச்சரிவிற்காக செய்யப்பட்ட செலவு குறித்து கேரள அரசு வெளியிட்டதாக அறிக்கை ஒன்று வெளியானது. அதில், நிலச்சரிவில் இறந்த உடலை தகனம் செய்ய 75,000 ரூபாய் செலவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள், தன்னார்வலர்களுக்கு உணவு மற்றும் தண்ணீருக்காக 10 கோடி ரூபாயும், அவர்கள் தங்குவதற்கான இடத்திற்கு வாடகையாக 15 கோடி ரூபாயும் செலவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களுக்கு உணவுக்கு 8 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் வசிப்பவர்களுக்கு ஆடைகளுக்காக 11 கோடி ரூபாய் செலவு ஆகியிருப்பதாகவு அரசு தெரிவித்துள்ளது. நிவாரணச் செலவு குறித்து சர்ச்சை எழுப்பப்படும் வேளையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிலச்சரிவில் முற்றிலுமாக இடிந்த வீட்டுக்கு கேரளா அரசு ஒரு லட்சத்து 30 ஆயிரமும், விளை நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 50 ஆயிரத்திற்கும் குறைவாகவே வழங்கியிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.